பாரதிதாசன் வரிகள் போல் “புதியதோர் உலகம் செய்வோம்” மயங்கி இருக்கும் தமிழ் இனத்தை மீட்டு எடுப்போம்.
வேரை இழந்த மரமும், வரலாற்றை மறந்த இனமும் வாழாது! வளராது!
உலகதிற்கே பண்பாட்டைக் கற்றுக் கொடுத்த நம் தமிழினம் இப்பொழுது தனது. அடையாளங்களை மட்டுமின்றி வணங்கிய தெய்வங்களையே தொலைத்து நிற்கிறது.
நம் தமிழினம் இயற்கையோடு ஒன்றிய வாழ்வையும், வாழ்வு முறைகளையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்த முன்னோர்களைத் தெய்வங்களாகப் போற்றி வாழ்ந்த இனம். அந்த வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியாகவே வீரத்தமிழர் திருமன்றம் அமெரிக்கா தொடங்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக தொல்காப்பியத்தில் உள்ள இந்தப் பாடல், மிகத் தெளிவாக இயற்கையோடு வாழ்ந்த வாழ்க்கை முறையை அழகாக விவரிக்கிறது.
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”
மாயோன், சேயோன், வேந்தன், வருணன் போன்ற தெய்வங்களைத் தலைமையாகக் கொண்டு,
நால்வகை திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் போன்றவற்றோடு
ஒன்றிய வாழ்வியல் தமிழர் பண்பாடு.
நம் தமிழர் பண்பாட்டில் மதங்களோ, கடவுள்களோ கிடையாது.
கீழடி ஆய்வுகளில் கிடைத்த ஆவணங்களே இதற்கு ஆதாரம்.
முன்னோர்கள் தெய்வங்களாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன
இந்த கொள்கைகளை முன்னெடுத்து வீரத்தமிழர் முன்னணி அமெரிக்கா தமிழர்களின்
பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடும்.
தமிழுக்காக பல மதங்கள் தொண்டாற்றி இருக்கின்றன
ஆசிவகம் முதல் கொண்டு சைவம் வைணவம் ஆலயம் பௌத்தம் கிருத்துவம் இஸ்லாம் போன்ற அனைத்து மதங்களும் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கின்றன.
மதங்களைத் தாண்டி தாய்மொழியாகத் தமிழைக் கொண்ட தமிழர்களிடம், நம் வாழ்வியலை கொண்டு செல்வோம்.
வீரத்தமிழர் முன்னனி அமெரிக்காவின் முக்கிய நோக்கம்,
நம் தமிழர் அடையாளத்தையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும், பெருமையையும், மதம் மற்றும் அரசியல் கலப்பிடமின்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே ஆகும்.
தொல்காப்பியம் தொட்டு பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்களையும், செய்யுள்களையும் எந்த உள் நோக்கமோ, கருத்து செருகல்களோ இல்லாமல் உள்ளதுபடியே சொல்லும் தலமாக இவ்வியக்கம் செயல்படும்.
தமிழ்மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகள், மரபு அறிவியல்
போன்ற தமிழ்நாட்டின் கூறுகளை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு
கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு உள்ளது.”
இத்தகைய கடமையைச் செயல்படுத்துவதற்கு அவற்றை பற்றிய தெளிவு அடிப்படைத் தேவையாக உள்ளது.
தமிழர்களின் வரலாற்றை அறிந்தால் தான் தமிழ்க் குடிகளில் நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு உலக அரங்கில் தமிழ் மக்களை உயர்த்த முடியும்.