வீரத்தமிழர் முன்னணி

                                                                                                                     தமிழர் கலாச்சாரம்

அன்று தொட்டே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழர்கள் முத்தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் இயல், இசை, நாடகம் என ஆய கலைகள் அறுபத்தினான்கும் தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றுகின்றன. கலாச்சாரம் எனப்படுவது வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், கலைகள் போன்றவற்றின் மூலம் வெளிப்படும் மக்களின் பிரதிபலிப்பாகும். தமிழர்கள் வேட்டி சேலை எனும் ஆடை கலாச்சாரத்தை உடையவர்கள் இவர்கள் அதிகம் இந்து சமயம் சார்ந்தவர்கள் இவர்களது வாழ்வியல் வழிபாட்டு முறைகள் போன்றன அதிகளவான சடங்கு சம்பிரதாயங்களை கொண்டு காணப்படுகின்றன.

          மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வரும் நிகழ்வுகள், திருமணம், புதுமனைபுகுதல், தொழில் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளை சுப நிகழ்வுகளாக கொண்டாடி தமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்களாக விளங்கினர் தமிழர்கள் தமது பண்பாடு கலாச்சாரங்களை வெளிக்காட்டும் மாபெரும் கோவில்களை அமைத்திருந்தனர். இது தமிழர்களின் கட்டட கலை சிற்பக்கலை ஓவிய கலை, நாட்டிய கலை போன்ற கலைகளையும் இறை நம்பிக்கையையும் பல தலைமுறைகளை தாண்டி உலகத்துக்கே பறை சாற்றும் அதிசயங்களாகும்.

                                                                                                                      கட்டிடக்கலை

         தமிழ் நாட்டில் அமைந்துள்ள “தஞ்சை பெருங்கோயில், கல்லணை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தில்லை நடராஜர் கோவில் இவை போன்ற ஆயிர கணக்கான கோயில்கள் மற்றும் பல கட்டுமானங்கள், தமிழர் கலாச்சாரத்தை வெளிக்காட்டும் உலகமே வியந்து பார்க்கும் அதிசயங்கள் ஆகும். 

தஞ்சைப் பெருவுடையார் கோயில்  அல்லது தஞ்சைப் பெரிய கோயில்  தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் இயுனெசுகோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கல்லணை, தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை – தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. 

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் ‘சிவன் முக்திபுரம்’ என்றும் அழைக்கின்றனர்.  இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.  இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

                                                                                                      

Copyright © 2023 வீரதமிழர் திருமன்றம்- அமெரிக்கா​

You cannot copy content of this page